தமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே.அவர்களை சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர் ,சங்க காலச் சோழர்,பிற்காலச் சோழர் என்று மூன்று வகையினராக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பிரித்து உள்ளனர்.
சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள்
சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள் பற்றி கலிங்கத்துபரணி,மூவருலா,மற்றும் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மனு, சிபி இவர்களின் சரித்திர செய்திகள் சங்க நூல்களில் உள்ளன.
இவர்களை தொடர்ந்து ககுத்தன்,துந்துமாறன்,முசுகுந்தன்,வல்லபன்,துஷ்யந்தன்,பரதன்,வீரசேனன்,சித்ராசுரன்,என்று மேலும் பலர் ஆண்ட இம்மண்ணில் கவேரன் என்பவன் காவிரியின் ஓட்டத்தை சோழ மண்ணிற்கு உருவாக்கி கொடுத்தவன்.
இவர்களுக்கு பின் புலிகேசி,சமுத்ரஜித் ,வசு,பெருநற்கிள்ளி,மற்றும் இளஞ்சேட் சென்னி போன்றோர் ஆண்டமண்ணில் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனே வடக்கே இமயம் வரை சென்று வெற்றியுடன் வந்த முதல் தமிழரசன்.இவனே சோழர் குலத்தின் பெருமை மிகு மன்னன்.காவிரிக்கு கரைகண்டு சோழநாட்டை வளமை கொழிக்கும் நாடாக மாற்றியவன்.இவன் காலம் கி. மு. 260 - 220 .
இவனை தொடர்ந்து கோச்செங்கணான்,கிள்ளிவளவன் ,மணிமுடிசோழன்,மற்றும் பலர் ஆண்டனர்.
சங்ககாலச் சோழர்கள்
இவர்களுள் கிள்ளிவளவன்,கோப்பெரும் சோழன்,நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி,சோழன் செங்கணான், ஆகியோர் மிகவும் புகழ் பெற்ற மன்னர்களாக விளங்கினர். சங்ககால சோழர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்ததாக தெரிகிறது.
கடைச்சங்கத்தின் இறுதி காலம் முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் சோழர்களை பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் கிடையாது.குறிப்பாக கி.பி 250 முதல் கி.பி. 575 வரை உள்ள 300 ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாக குறிக்கின்றனர்.அக்காலகட்டத்தில் வடநாட்டிலிருந்து வந்த களப்பிரர் என்ற கூட்டத்தினர் ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்காலகட்டத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவும் ,அரசியல் தலைவர்களாகவும் அடங்கி வாழ்ந்துள்ளனர்.களப்பிரர்களை தொடர்ந்து பல்லவர்கள் சோழநாட்டை ஆண்டனர்.
சோழர்கள் களப்பிரர்களாலும் ,பல்லவர்களாலும் வலிகுன்றி நின்றாலும் ,சிற்றரசர்களாகவும் , பழையாறையில் நிலையாகவும் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment